நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு,

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, August 22, 2015

ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு,

திட்டமிடுதலும் நிகழ்ச்சி தயாரிப்பும் பகுதியில், ஒரு புதிய தொழிலை தொடங்குவதற்கு முன்பு, தொழில் தொடங்குவதர்க்குத்தேவையான திட்டமிடுதலையும், அதைச்சார்ந்த விவரங்களை தெரிந்துகொள்ளுதல் மிக மிக முக்கியம். முதலில் எது நமக்கான தொழில் என்று தீர ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு கீழ்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

உங்களுடையது முதல் தொழில் முயற்சி என்றால், உங்களுக்கு ஏற்ற முதலீட்டை மட்டும் போட்டு ஆரம்பியுங்கள். அகலக்கால் நினைப்பு வேண்டாம். மேலும், உங்கள் முயற்சி தனி முயற்சியாக இருப்பது உத்தமம். உறவினருடனோ, நண்பருடனோ சேர்ந்து தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், உங்களைப் போலவே அவர்களும் உண்மையான, நேர்மையான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் உள்ளவர்களாக இருத்தல் மிக அவசியம். அப்படி இல்லாவிட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மன வருத்தம் உண்டாகிவிடும். இதனால் செய்யும் தொழில் பாதிக்கும். லாபமோ, நஷ்டமோ உங்கள் தனித்திறமைகளை முன்வைத்துத் தொடங்கும் போது, உங்களுடைய குறைகளை நீங்களே அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்.

குறுந்தொழிலோ, சிறு தொழிலோ செய்பவர் தன்னை ஓர் உழவருடன் ஒப்பிட்டுக் கொள்ளவேண்டும். நிலம், நீர் அனைத்தும் இருந்தாலும் சிறந்த அறுவடையை மனத்தில் இருத்திக்கொண்டு ஒரு உழவர் கடுமையாக உழைக்கிறார். அதைப் போல் தொழில் முனைவோர் தனது செயல்திறனைப் பயன்படுத்தி இலக்கைக் குறிவைத்து உழைக்க வேண்டும். ஒருவரது உழைப்பைப் பொறுத்தே அறுவடை எத்தனை ஆண்டுகளுக்குக் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்படுகிறது.

சிலர், லாபம் கிடைத்தவுடன் உடனே செலவு செய்யவும் ஆரம்பித்து விடுவார்கள். கல்லாவில் சில்லறை சேர்ந்தவுடன் ஒரு ஓட்டல் முதலாளி அதனை எடுத்துக் கொண்டு காணாமல் போனால் எப்படி இருக்குமோ அப்படிப்பட்டதுதான் இதுவும். இடத்துக்கான வாடகை, மின்சாரக் கட்டணம், போக்குவரத்துச் செலவு, சப்ளையர்களுக்குத் தரவேண்டிய பாக்கி, வங்கிக் கடன் போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுத்துவிட்டு, மிச்சமிருப்பதை சேமிப்பாக வைத்துக்கொள்ளவேண்டும். மிகச் சிறு பகுதி மட்டுமே செலவுகளுக்கு.

நீங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோராக இருந்தால் குறைந்த முதலீடு உள்ள தொழில்களைத் தேர்வு செய்வது மிக அவசியம். ஆனால், எந்தச் சிறு தொழிலும், எளிமையாக இருந்தாலும், திறமையாக அதை நடத்திச் செல்லும்போது, அது வளர்ச்சி அடைவதைத் தவிர்க்கவே முடியாது. சிறு அலுவலகமாக இருந்தாலும், அதை ஒரு அழகான இடமாக மாற்றி, தங்கள் தொழிலை, பொருளை, தங்களை, இந்தச் சமூகத்தின் முன்பு அடையாளம் காட்ட வேண்டியது மிக அவசியம். வாடிக்கையாளர்களை தொழிலதிபர் நேரிடையாகச் சந்திப்பதும் தொடர்புகளை விரிவுபடுத்துவதும் இந்தச் சூழலில் மிக அவசியம். எந்தத் தொழிலிலும், தரமான பொருள் அல்லது சேவை இருக்கும் பட்சத்தில், வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகுவது இயல்பானது.
பிரமிக்க வைக்கும் அளவுக்கு பணம் ஈட்டியவர்களையும் நம்பமுடியாத அளவுக்கு அவற்றைத் தொலைத்தவர்களையும் நான் கண்டிருக்கிறேன். செல்வம் என்பது கையை விட்டு செல்லக் கூடிய ஒரு கருவி. தக்க வைத்துக் கொள்ளும் சூத்திரம் அறியாதவர் எவ்வளவு ஈட்டினாலும் பிரயோஜனம் இல்லை. சிறு லாபம் வந்தவுடன் நிலை தடுமாறி வாழ்க்கைத் தரத்தை மிக அதிகமாக உயர்த்திக் கொள்ளும் பெரும்பாலோரை நான் கண்டிருக்கிறேன். தொழிலிலிருந்து வரும் நிகர லாபத்தின் ஒரு பகுதி அந்தத் தொழிலை மேம்படுத்துவதற்குச் செலவு செய்ய வேண்டியது அவசியம். தொலைநோக்கு மிக அவசியம்.

நாற்பது வயதுக்குமேற்பட்ட பலரும் பொதுவாக இவ்வாறு கூறுவதுண்டு. ‘நான் கூட சிறிது காலம் தொழிலில் ஈடுபட்டேன். ஆனால் எதிர்பாராத முன்னேற்றம் இல்லாததால், அத்தோடு விட்டுவிட்டேன்.’ எந்தவொரு தொழிலையும் நின்று, நிதானித்து, நிலைத்து நிற்கும்படி தொடர்ந்து நடத்துவதில்தான் திறமை அடங்கியுள்ளது. சிறிது காலம் அதைச் செய்தேன், சிறிது காலம் இதைச் செய்தேன் என்று சொல்பவர்கள் தொழிலைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல், ஒரு மேம்போக்கான உந்துதலில் தொடங்கி இருப்பவர்களாக இருக்கவேண்டும். இல்லையேல் தொழில் ஆர்வத்திலிருந்து அவ்வளவு சீக்கிரம் பின்வாங்கிட முடியாது.

உலகளாவிய அளவில் நிர்வாகவியல் குறித்து ஆய்வுகள் நடத்தியிருப்பவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் இது. ஒரு தொழிலின் வீழ்ச்சிக்குக் காரணம் அந்தத் தொழிலை நடத்துபவர்தானே தவிர, அந்தத் தொழிலால் ஏற்படும் இடர்பாடுகள் அல்ல. முன்பெல்லாம் பிசினஸில் இறங்கவேண்டுமானால் ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவு (Technical expertise) மட்டும் போதும் என்று சொல்வார்கள். ஆனால் இன்றோ நேர்மையான எண்ணம், நிர்வாகத் திறமை, பிரச்னைகளைக் கையாளும் விதம், கடுமையான உழைப்பு, சமூக அக்கறை ஆகிய அனைத்தும் தேவைப்படுகின்றன.

இதைப் படிக்கும்போது உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். வண்ணமயமான விளம்பரங்கள், பகட்டு வார்த்தைகள், ஆடம்பரமான மக்களைக் கவரும் உத்திகள் போன்றவற்றைச் செய்துதானே பெரும்பாலான நிறுவனங்கள் தொழிலை நடத்திக் கொண்டிருக்கின்றன? சற்று முன் பார்த்த அம்சங்கள் எங்கே இருக்கின்றன? என்றால், என் பதில் இதுதான். உண்மை, உழைப்பு, உறுதி ஆகியவை நம் வசம் இருந்தால் நம் முயற்சி முழு வலிமையுடன் நிச்சயம் வெற்றியடையும். மற்றபடி, பொய்மையும் போலித்தனமும் நிச்சயம் ஒருநாள் நம்மைக் கீழே இழுத்துவிடும்.

இன்று மக்கள் வேகமாக முடிவெடுத்து ஒரு பொருளையோ ஒரு நிறுவனத்தையோ நம்பிவிடுகிறார்கள். அதே போல், மிக எளிதாக தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டும் விடுகிறார்கள். உண்மைத்தன்மை இல்லாவிட்டால் எந்தவொரு நிறுவனத்தாலும் தாக்குப்பிடிக்கமுடியாது. அதனால் தரமான பொருளையோ, சேவையையோ மக்களுக்கு அளிப்பது ஒவ்வொரு தொழிலிலும் ஈடுபடுவோரது கடமையாகும்.

ஒரு தொழிலில் ஈடுபடுபவரின் பிரச்னையும் மன உளைச்சலும் அந்த அனுபவத்தைப் பெற்றவர்களால் மட்டுமே உணரமுடியும். பொதுவாக நமது சமுதாயத்தில் பிசினஸ் செய்பவர்களைப் பார்த்துப் பெருமூச்சு விடுபவர்களே அதிகம். அவர்களுக்கென்ன பிசினஸில் பணம் அள்ளி எடுக்கிறார்கள் என்றுதான் அவர்கள் சொல்வார்கள். அவர்களுடைய ஏக்கங்களை ஒதுக்கிவைத்துவிட்டு தொழிலில் முழுக்கவனத்தைக் குவிக்கவேண்டியது அவசியம்.

தொழில் முனைபவர் வாடிக்கையாளரின் பிரச்சனைக்கு உடனடித் தீர்வுகளை யோசிக்கும் திறன்படைத்தவர்களாக இருப்பது அவசியம். இந்த இடத்தில் தொழில் முனைவோரின் சில தனிமனித இயல்புகள், தன்னிச்சையாக வெளிப்பட வாய்ப்பு உள்ளது. அது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. உதாரணமாக ஒருவர் வீட்டிலோ அல்லது தான் வாழும் சூழலிலோ, கோபப்படுபவராக இருந்திருக்கலாம். பிறரின் ஏளனமான சொற்களையோ கடுமையான விமரிசனங்களையோ பொறுத்துக் கொள்ள முடியாத இயல்புடையவராக இருந்திருக்கலாம். ஆனால் தொழிலென்று வந்த பிறகு வாடிக்கையாளரின் விமரிசனத்தை மனத்தில் கொள்ளாமல் செயல்படவேண்டும்.

வாடிக்கையாளர் சில நேரம் எரிந்து விழலாம். பாராமுகத்தோடு சொற்களைப் பேசலாம். கடுமையான வார்த்தைகளுடைய கடிதத்தை அனுப்பலாம். இவை யாவும் தனி மனித மரியாதையை அவமதிப்பதாக எடுத்துக்கொண்டு செயல்படுவது வியாபாரத்தில் தவறு. நிதானமும் பொறுமையும், குறிப்பிட்ட நேரத்தில் முடிவெடுக்கும் திறனும், எடுத்த முடிவை மாற்றிக் கொள்ளும் சாமர்த்தியமும், ஒரு பிரச்னைக்கு பல தீர்வுகளை யோசனை செய்வதும் மிக அவசியம்.

தகுதியான நபர்கள் இல்லாமல் எந்தவொரு தொழிலையும் நடத்தமுடியாது. உங்கள் உறவினருக்கோ நண்பருக்கோ உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்புத் தருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் அவருக்குரிய வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தாத பட்சத்தில் அவரை வெளியேற்றுவதில் எந்தவித தயக்கமோ, உணர்வுப் பிரச்னையோ எழக்கூடாது. பரவாயில்லை, பொறுக்கலாம் என்று தவறுகளைப் பொறுத்துக்கொள்ளத் தொடங்கினால் அதுவே அந்தத் தொழிலின் வீழ்ச்சிக்குப் பெரும் காரணமாக அமைந்துவிடும். பெரும்பாலான சிறு தொழிலதிபர்கள் ஒரு சில தொழிலாளர்களை அளவுக்கு அதிகமாக நம்பி விடுவார்கள்.

எந்தவொரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்பு அதை நீங்கள் தனி நபராகச் செய்யப்போகிறீர்களா அல்லது கூட்டுத் தொழிலாகச் செய்யப்போகிறீர்களா என்பதைப் பற்றித் தீர்மானமான, தீர்க்கமான முடிவை எடுப்பது மிக அவசியம். தனிப்பட்ட நட்பு வேறு, தொழில்முறை உறவு வேறு. இதைப் புரிந்துகொள்ள தவறினால் மன உளைச்சல் பெருகும்.

உடன் இருப்பவர் உழைப்பாளியா அல்லது சுகவாசியா, நேர்மையானவரா அல்லது போலியா, லாபத்தில் மட்டும் பங்கேற்பவரா அல்லது நஷ்டங்களிலும் உடன் இருப்பவரா, பிரச்னைகளைத் துணிவுடன் எதிர்கொள்பவரா அல்லது ஓடிவிடுபவரா போன்றவற்றைத் தெரிந்துகொள்ளவேண்டும். உங்கள்மீது அக்கறையும் அன்பும் கொண்டவராக அவர் இருப்பது நல்லது.

கவனம், ஒரு தொழிலைத் தொடங்குவதில் மட்டுமல்ல, இழுத்து மூடுவதிலும்கூட சட்டச் சிக்கல்கள் உள்ளன. தொடரவும் முடியாமல் மூடவும் முடியாமல் திரிசங்கு சொர்க்கத்தில் அகப்பட்டு செய்வதறியாது நிற்கும் நிலையைத் தடுக்கவேண்டும். ஒருவர் தங்களுடைய சொந்த லாப, நஷ்ட பிரச்னைகளால் சுய தொழிலிலிருந்து விலகினால், பலர் வேலையிழந்த தடுமாறுவார்கள் அல்லவா?

சிறு தொழில் ஒன்றை மேற்கொள்பவரை வட்டத்துக்குள் இருக்கும் ஒரு புள்ளியோடு ஒப்பிடலாம். முதலில் அவரால் ஒரு சிறு குழுவுக்கு (team of employees) வேலை வாய்ப்பு கிடைத்து பலன் பெறுகிறார்கள்.

அடுத்து, அவருடைய தொழிலுக்குத் தேவையான கருவிகளையோ உபரிப் பொருளையோ மூலப் பொருள்களையோ வழங்குபவர்கள் (suppliers) பலன் பெறுகிறார்கள். அவர்களுடைய வியாபாரம் வளர்ச்சி அடைகிறது. அடுத்த கட்டமாக, தொழில் செய்பவர் தான் உற்பத்தி செய்யும் பொருளையோ (finished products) அல்லது சேவையையோ (services) சமுதாயத்தின் முன் வைக்கின்றனர். பிறகு, அவற்றை நுகரும் வாடிக்கையாளர்கள் (customers) உருவாகிறார்கள். ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழில் உருவாவதால், அந்த இடத்தைச் சுற்றி பல சிறிய பெரிய அனுகூலங்கள் உருவாகின்றன.

உதாரணமாக, சிறு தொழில் நடத்தும் இடத்துக்கு அடிக்கடி பொருள்கள் வந்து போக வேண்டிய நிலை இருந்தால், அந்தத் தொழிலதிபர் சாலைப் பிரச்னையைத் தீர்க்க வேண்டியவராக மாறிவிடுகிறார். தனது சுயலாபத்துக்காகவும் தொழில் முன்னேற்றத்துக் காகவும்தான் அவர் அவ்வாறு செய்கிறார் என்றாலும் அவருடைய சுயநலன் பொது நலத்துக்கும் உகந்ததாக மாறிவிடுகிறது. அதே போல் அவர் செலுத்தும் வணிக வரி, வருமான வரி போன்றவை மூலம் அரசாங்கத்துக்கும் நாட்டுக்கும் வருமானம் பெருகுகிறது. நல்லப் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படுகிறது. தகவல் நன்றிகளுடன் திருவாளர் மைதிலி "பெண்மை.காம்"

No comments:

Post a Comment

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.