நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : நிகழ்ச்சி மேலாண்மையில் ஜொலிக்கலாம்!

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Saturday, August 22, 2015

நிகழ்ச்சி மேலாண்மையில் ஜொலிக்கலாம்!

நிகழ்ச்சி மேலாண்மையில் ஜொலிக்கலாம்!
பெண்களிடம் இயல்பிலேயே நிர்வகிக்கும் திறனும், ஒருங்கிணைக்கும் திறனும் அதிகமாக இருக்கும். அந்தத் திறனைச் சரியாகச் செயல்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொண்டால் வீட்டில் இருந்தபடியே நிகழ்ச்சி மேலாண்மை(Event Management) துறையில் சாதிக்கலாம் என்கிறார் ‘ஸ்வதேஷ் ஈவன்ட்ஸ்’ நிர்வாகி ஷியாமளா ரமேஷ்பாபு. இவர் இரண்டு ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி மேலாண்மை துறையில் இயங்கிவருகிறார்.

அடிப்படையில் பள்ளி ஆசிரியரான ஷியாமளா, இந்தத் துறையில் நுழைந்தது முற்றிலும் எதிர்பாராத ஒன்று. “என் அம்மாவின் சிகிச்கைக்காக ஒரு தனியார் மருத்துவமனையில் ஒரு மாதம் அவருடன் தங்கியிருந்தேன். அப்போது நான் தனியார் பள்ளியில் ஆசிரியர் பயிற்சியாளராக இருந்தேன். மருத்துவமனையில் இருந்தபடியே என் பள்ளி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தேன்.

என் அம்மாவுக்கு சிகிச்சையளித்த டாக்டர் டி.ஜி. பாலச்சந்தர் என் ஒருங்கிணைப்புப் பணியைப் பார்த்துவிட்டு என்னிடம் ஒரு மருத்துவ மாநாட்டை ஒருங்கிணைக்கும் பொறுப்பை ஒப்படைத்தார். அதை நான் வெற்றிகரமாகச் செய்துமுடித்த பிறகுதான், நிகழ்ச்சி மேலாண்மையில் எனக்கு இருக்கும் திறமையை நான் உணர்ந்தேன்” என்கிறார் ஷியாமளா.

சவாலை சமாளிக்கலாம்

அதற்குப் பிறகு மருத்துவ மாநாடுகள், பெருநிறுவன நிகழ்ச்சிகளை வீட்டில் இருந்தபடியே நிர்வகித்துவருகிறார் இவர். நிகழ்ச்சி மேலாண்மை என்பது சவால்கள் நிறைந்தது. சவால்களை விரும்பும் பெண்களுக்கு இந்தத்துறை பொருத்தமானதாக இருக்கும் என்று சொல்கிறார் இவர்.

“இந்தத் துறையில், 24 மணிநேரமும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். நிறைய தொடர்புகளை உருவாக்குவது, எதிர்மறை விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்குப் பொறுமையுடன் பதிலளிப்பது, அவர்களது தேவைகளை முடியாது எனச் சொல்லாமல் முடிந்தவரை நிறைவேற்றுவது எனப் பல்வேறு சவால்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்தத் துறையில் பேரார்வம் இருந்தால் இதையெல்லாம் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்” என்கிறார் ஷியாமளா.

நிகழ்ச்சி மேலாண்மையில் பல்வேறு அம்சங்கள் இருக்கின்றன. அந்த அம்சங்களில், எதற்கு நாம் பொருத்தமாக இருப்போம் என்று தெரிந்துகொள்வது முக்கியம். “நான் கல்லூரி நாட்களிலிருந்தே நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்திருக்கிறேன். அதனால், நான் ஒருங்கிணைக்கும் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளர் பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன். இப்படி நம் தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கும் இந்தத் துறையில் நிறைய வழிகள் இருக்கின்றன.

அதே சமயம், எல்லா வேலைகளையும் நாமே நிர்வகித்துவிட முடியும் என்றும் கண்மூடித்தனமாக நம்பக் கூடாது. ஒவ்வொரு வேலைக்கும் நம்பகமான நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒப்படைக்கலாம். ஆனால், அவர்களை ஒருங்கிணைக்கும் வேலையைக் கவனமாகச் செய்ய வேண்டும். அதேசமயம், நிகழ்ச்சியில் கடைசி நேரத்தில் எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் அதைச் சமாளிப்பதற்கு மாற்று ஏற்பாடுகளையும் யோசித்துவைத்திருக்க வேண்டும்” என்கிறார் ஷியாமளா.

தனியாக ஒரு நிறுவனத்தைத் தொடங்குவதற்கு முன்னர், ஏதாவது ஒரு நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவம் இருந்தால் இன்னும் நல்லது என்கிறார் இவர். “தன்னிச்சையாக உடனடியாக முடிவெடுக்கும் திறன் இந்தத்துறைக்கு மிகவும் அவசியம். உடல்நிலையை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க வேண்டியது, எப்போதும் இன்முகத்துடனும், நம்பிக்கையுடன் உங்களை வெளிப்படுத்திக் கொள்வதும் முக்கியம். எனக்கு என் குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்பு கிடைத்ததால் என்னால் இந்தத் துறையில் வெற்றிகரமாக செயல்பட முடிகிறது” என்கிறார் ஷியாமளா. (The Hindu: May 31, 2015 11:34)

No comments:

Post a Comment

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.