பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-6
மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-3
அப்படித்தான் ஒருமுறை எங்களது தமிழாசிரியர் எங்களை வைத்தே விளையாடி, எங்களது பாடங்களை வாழ்நாள் முழுதும் நாங்கள் மறக்க முடியாதபடி ஒரு ஆச்சரிய விளையாட்டு விளையாடினார் அது என்ன விளையாட்டு?
அவர் எனது செல்ல தமிழாசிரியர் திரு.நா.ஆ.மாலிக்(தமிழக அரசின் சிறப்பாசிரியர் என விருது வாங்கியவர்) செல்ல தமிழாசிரியர் என்று சொல்லக்காரணம் அவர் எங்களுக்கு பிடித்த வழியில் ஒரு விளையாட்டை விளையாடுவதைப்போல தமிழ் பாடங்களை சொல்லித்தருவார். எங்கள் தாய்மொழியான தமிழைத்தான் நாங்கள் நன்றாக பேசுகிறோம் படிக்கிறோம் தமிழ் வழியில் கணிதம், அறிவியல், வரலாறு என்று படிக்கிறோம் பிறகு எதற்கு தமிழை தனியாக ஒரு பாடமாக அதையும் படித்து பரீட்சை எழுதி மதிப்பெண் எடுக்கவேண்டும் இது சரியில்ல என்று நாங்கள் கூறியதைக்கேட்டு, எங்களுக்கு தமிழின்மீது ஒரு தனி விருப்பத்தையும், தமிழை விரும்பி படிக்க ஒரு ஈடுபாட்டை ஏற்படுத்தியவர் இந்த தமிழாசிரியர்.
அன்று எங்களது பள்ளியின் கால அட்டவணைப்படி முதல் வகுப்பு தமிழ்... மாணவ மாணவியர் அனைவரும் தமிழ் ஐயா அவர்களின் வருகைக்காக காத்திருந்தோம்...... இன்று அரையாண்டு பரிட்சை விடைத்தாள்கள் அனைத்து மாணவர்க்கும் வகுப்பில் வழங்கப்படும் என்கிற எதிர்ப்பார்ப்பில், ....பின் வரிசையில் ஒரு சிலருக்கு ஏன்டாப்ப பள்ளிக்கு வந்தோம் என்றும், மற்றும் பலருக்கு சற்று பயம் கலந்த இறுக்கமான சுழலில் இருப்பது போல்... அமைதியாக ஆசிரியரின் வருகைக்காக காத்திருந்தோம்.
நானும் எனது நண்பனும் எப்போதும் இணைந்தே இருப்போம், நாங்கள் உட்காருவது வகுப்பின் முதல் வரிசை, வகுப்பின் பாதியளவு மாணவிகளின் வரிசைக்கு அடுத்த சற்று இடைவெளிவிட்டு எங்களின் வரிசை ஆரம்பம், நாங்கள் தேர்வை நன்கு எழுதி இருந்ததால் மிகுந்த மகிழ்ச்யுடன் ஆசிரியரின் வருகையை எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தோம், எங்களுக்கு முதல் மதிப்பெண் நிச்சயம் கிடைக்கும் என்ற மகிழ்ச்சியில், முகத்தில் பெருமிதம் பொங்கி வழிந்தது. ஸ்டைலாக சற்று சட்டை காலரை உயர்த்தலாமா? வேண்டாம்..வேண்டாம்...முதலில் விடைத்தாள் கையில் வரட்டும் பிறகு பார்த்துகொள்ளலாம். இந்த மாணவிகள் ரொம்ப மோசம், விடைத்தாளில் ஏதாவது ஒரு மதிப்பெண் குறையை காண்பித்து, ஆசிரியரிடம் அழுது மன்றாடி தமது மதிப்பெண்களை சற்று உயர்த்திக்கொண்டு அதனால் முதலிடத்திற்கு முன்னேரிவிடுகின்றனர்... இருக்கட்டும், இந்தமுறை நாமும் முயற்சிப்போம், முதலிடம் நமக்குதான்........
தமிழ் ஐயா (ஆசிரியர்) வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம், வகுப்பை ஒரு முறை சுற்றிப்பார்த்த ஆசிரியர், நான் இன்னும் உங்களது அரையாண்டு விடைத்தாள்களை திருத்தவில்ல என்றார்..... அனைவரிடமிருந்தும் ஒரு பெருமூச்சு வெளிவந்தது. அப்போது ஆசிரியர் என்னை அழைத்து எங்கள் வகுப்பின் அரையாண்டு விடைத்தாள் கட்டை என்னிடம் தந்து, உங்கள் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களையும் நியே திருத்தி, சரியான மதிப்பெண் வழங்கி, நாளைக்குள் திரும்ப என்னிடம் ஒப்படைக்கவேண்டும், உனது நண்பன் வடிவேலையும் உனக்கு உதவியாக சேர்த்துக்கொள் என்று கூறிய தமிழாசிரியர் அந்தப்பளியின் உதவி தலைமை ஆசிரியராக இருந்ததால், பள்ளியின் முக்கிய அலுவலக வேலை இருப்பதாக கூறி, உடனே வகுப்பை விட்டு சென்றுவிட்டார். (செல்வதற்கு முன் எங்களிடம் "கவனமாகவும் வகுப்பில் ஒருவரும் குறை சொல்லாத அளவில் சரியாக விடைத்தாள்கள் திருத்தப்படவேண்டும் என கட்டளையிட்டார் ).\
!!!!அவ்வளவுதான் வகுப்பில் அனைவரது கண்களும் எங்கள் பக்கம் திரும்ப, நாங்கள் மிகப்பெரிய உருவம் பெற்றதுபோல்...(விஸ்வரூபம்)... காற்றில் மிதக்கலானோம். எங்களுக்கு இப்படி ஓர் வாய்ப்பா? சற்றுநேரம் எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை... திக்குமுக்காடிப்போனோம்.
அரையாண்டு விடைத்தாள் கட்டு எங்கள் கையில் வந்தபோது மிகப்பெரிய பொறுப்பு வந்துவிட்டதுபோல் உணர்ந்தோம். சில மாணவிகள் எங்கள் பக்கம் ஓடி வந்து, நாங்கள் "கோனார் தமிழ் உரைநடை" பாட நூலின்படி தேர்வு எழுதிள்ளோம், ஆகவே நீங்கள் எங்களது விடைத்தாள்களை இதைபார்த்து படித்து திருத்துங்கள் என்றார்கள்.... இன்னும் சிலர் வேறு பல உரைநடை விடைத்தாள் நூலையும் தந்து கவனமாக திருத்தும்படி கூறினார்கள்..... கையிலும், மனதிலும் மிக அதிக கணம்...... நிரம்பியது போல் உணர்தோம்......
மறுநாள் திருத்திய விடைத்தாள் கட்டுக்களுடன், சரியாக பள்ளிமனியாடிக்கும்போதுதான் வகுப்புக்குள் நுழைந்தோம். வழக்கம்போல ஆசிரியர் தமிழ் அய்யா வகுப்புக்குள் நுழைய அனைவரும் எழுந்து நின்று வணக்கம் சொல்லி அமர்ந்தோம். தமிழ் ஐயா அழைப்பதற்கு முன்பே நாங்கள் அவரிடம் சென்று திருத்திய விடைத்தாள்களை தந்தோம்.
ஆசிரியர் ஒவொருவராக பெயர் கூறி அழைத்து அவரவர் விடைத்தாள்களை வழங்கினார். எங்களது பெயர் கூப்பிட்டதும் நாங்களும் எங்களது விடைத்தாளை பெற்றுக்கொண்டோம். நாங்கள் எங்களுடைய விடைத்தாளை திறந்து பார்க்காமல் மற்றவர்களின் முகங்களைத்தான் பார்த்தவண்ணம் இருந்தோம். பெற்றுக்கொண்ட அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி தெரிந்தது ( மதிப்பெண்களை வாரி வழங்கியிருப்பதால் நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும்)
எனக்கும் என் நண்பனுக்கும் சற்று வருத்தமே, காரணம் நாங்கள் திருத்திய விடைத்தாளுக்கு நாங்களே எங்களுக்கு முதல் மதிப்பெண் போட்டுக்கொண்டால் சரியாக இருக்காது என்பதால் இந்தமுறை வகுப்பில் இரண்டாவது மற்றும் முன்றாம் நிலைக்கான மதிப்பெண்தான் பெறமுடிந்தது மேலும் அதிகப்படுத்த முடியாத தர்மசங்கடமான நிலை, இருந்தும் வகுப்பின் அனைத்து விடைத்தாள்களும் எங்களால் திருத்தப்பட்டது என்கிற பெருமை எங்களின் மனம் முழுவதும் பரவிக்கிடந்தது.
அன்றைய பாட வகுப்பு முடிந்ததும், தமிழ் அய்யா எங்கள் இருவரையும் தனியே வகுப்புக்கு வெளியே அழைத்துச் சென்று "கிருஷ்ணா, வடிவேல் நீங்கள் இருவரும் நன்கு படிப்பவர்கள், அனாலும் சென்றமுறை நீங்கள் சற்று குறைவான மதிப்பெண் எடுத்து சற்று கவனக்குறைவாக இருந்தீர்கள், எனவேதான் உங்களை வகுப்பின் அனைவரது விடைத்தல்களையும் திருத்தும்படிக்கூறினேன், நீங்களும் கவனமாக விடைத்தாள்களை திருத்தியதால் இனி உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த பாடங்களை மறக்கமாட்டீர்கள். மாறாக நான் உங்களுக்கு வினாத்தாளுக்கான விடையை நன்கு மண்டையில் நுழையட்டும் என்று நுருமுறை கட்டாயப்படுத்தி எழுத சொல்லியிருந்தால் நீங்கள் நிச்சயம் செய்திருக்க மாட்டீர்கள், அப்படி செய்திருந்தாலும் கோபத்தினால் அது உங்கள் மனதில் பதிந்திருக்காது எனவேதான் இப்படி செய்தேன்" என்று கூறிக்கொண்டே போனார் ... எங்களுக்கு ஆசிரியர் "கீதையை" உபதேசம் செய்வதுபோல இருந்த்தது, எங்களது பெருமை என்ற மிகப்பெரிய மாய உருவம், அடங்கி , ஒடுங்கி மிகச்சிறிய உருவமாக மாறியதுபோல வெட்கித் தலைக் குனிந்தோம்.
"இந்த நிலை மாறிவிடும் என்பதை நான் எப்போதும் மறந்ததில்லை. அது இன்பமாக இருந்தாலும் சரி, துன்பமாக இருந்தாலும் சரி... மாறிவிடும்! இதோ இந்தக் கணத்திலும் கூட!" (வறுமையில் பிறந்து, வாழ்வெல்லாம் போராடி, உலகையே தன் பெயரை உச்சரிக்க வைத்த மாபெரும் கலைஞன் சார்ளி சாப்ளினின் இந்த மந்திரச் சொல், நம் வெற்றிக்கும் நல்ல சாவி!)
வாருங்கள் சுட்டீஸ் நமது அடுத்த பயிற்சி விளையாட்டில் உங்களோடு விளையாட வருகிறேன்.
வாழ்க்கையில் உயர...விடாமல் முயலுங்கள், விரும்பியதைப் பயிலுங்கள்.
தொடர்ந்து சிந்திப்போம் .....மீண்டும் சந்திப்போம் !
நன்றிகளுடன் கோகி. என்கிற கோபால கிருஷ்ணன்- ரேடியோ மார்கோனி.
முன்னோட்டம்:-
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-7*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-1*