கதை சொல்வது என்பது நம் தமிழ் கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு வழக்கம். இது காலங்காலமாக நம் பண்பாட்டுடன் கலந்து, வளர்ந்துவரும் ஒன்று. .."தாத்தா பாட்டிகள் உள்ள வீடு" ஆயிரக்கணக்கான புத்தகங்களை கொண்ட நூலகத்திற்கு சமம் !"
முன்பெல்லாம் கிராமங்களில் இரவு ஒன்பதுமணியானால் போதும் வீட்டுக்கு வெளியே இருக்கும் ஆலோடி எனப்படும் வராண்டாவில் பாட்டி அமர அவளைச் சுற்றி அவள் மடியில் தலைவைத்து சுவாரஸ்யமாக கதைகள் கேட்பது வழக்கம். அவளும் கருத்துச் செறிந்த, வீரமிக்க இதிகாச, புராண, சமூகக் கதைகள் சொல்வாள். அவைகளைக் கேட்டு குழந்தைகளாகிய நம் மனதில் நல்ல பண்பு, பழக்க வழக்கங்கள், வீரம் வளர்வதுமுண்டு.
இதன் அடிப்படையில் நம் முன்னோர்களும் பஞ்சதந்திரக் கதைகளென்று நீதி மேம்படவும், விக்ரமாதித்தன் கதைகளென்று நம் புத்தியைத் தீட்டக்கூடிய பலவற்றை எழுதி நமக்களித்துள்ளனர்.
வேனிற்காலங்களில் பெரும்பாலும் நதிகள் வற்றிவிடும். அந்த ஆற்று மணலில் தெருக்கூத்து என்று பல சரித்திரக் கதைகளை நடித்துக் காட்டிச் சொல்வதுமுண்டு. கேரளத்தில் சாக்கியார் கூத்து என்று கதைசொல்லும் பழக்கமும் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இது தவிர கோயில்களில் திருவிழாக் காலங்களில் கதாகாலட்சேபம் என்ற நிகழ்ச்சி நடைபெறுவது இன்றும் வழக்கிலுள்ளது. பொம்மலாட்டங்கள் மூலமாகவும் அக்காலத்தில் பல தெய்வீகக் கதைகளும் சொல்லப் பட்டு வந்தது.
இவையாவும் காலப் போக்கில் வளரும் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி கதை சொல்லும் இக் கலையை செப்பனிட்டு இப்போதெல்லாம் திரைப்படங்கள் வாயிலாக பல கதைகள் சொல்லப்பட்டு வருவதை நாம் நன்கறிவோம்.
தற்சமையம இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழா நடைபெறுவதுகேட்டு காலங்காலமாக கதைகளைச் சுவைத்துவந்த எனக்கு மிக்க மகிழ்ச்சியாயிருக்கிறது. இந்தக் கதைசொல்லும் கலை மென்மேலும் பலர் பங்கு பெற்று ஊக்குவிக்கப்பட்டு விரிவடைந்து வளர வேண்டும் என்பதே என் அவா!
நன்றி...
அருமையான பதிவு
ReplyDelete