நிகழ்ச்சி தயாரிப்பாளர் பட்டறை : June 2018

சம்பளமோ கிம்பலமோ... எளிமையாக சம்பாதிக்க....

GOOGLE-1

.

.

Thursday, June 7, 2018

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-19* ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே.


ஹலோ சுட்டீஸ் இனிய மாலை வணக்கம்,

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-19*
*(ஒள) பணத்தின், நேரத்தின், ஆற்றலின் மதிப்பை தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டு-4*  

ஒருநாள் என்பது நமக்கு 30மணி நேரம் ஆனால் மற்றவர்களுக்கு வெறும் 24 மணி நேரம் மட்டுமே. அது எப்படி என்று அந்த விளையாட்டை விளையாடி தெரிந்துகொள்வோமா?. 

வேகமாக இயங்கும் இயந்திர உலகில் ஒருநாள் என்பது ஆரம்பித்ததுமே முடிந்துவிடுவது போல உள்ளது. இன்றைக்கு என்ன செய்ய போகிறோம் என்பதை திட்டமிட்டு செய்ய வேண்டும் என்பார்கள். இன்று திட்டமிடவே பாதி நாட்கள் போய் விடுகிறது என்று கூறுபவர்களும் உள்ளனர்.
ஆனால், அதே நேரத்தில் ஒரு நாளை சிறப்பாக கையாளும் ஆளுமை திறன் கொண்டவர்களும் உள்ளனர். ஒரு நாளில் எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்? எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை அறிந்து செயல்படுபவர்களும் உள்ளனர். அவர்களது ஒருநாள் எப்படி உள்ளது என்று பார்ப்போம்.

புல்லட் ட்ரெயினாய் பறக்கும் நேரத்தை யாராலும் நிறுத்தி வைக்கமுடியாது. ஆனால் அந்த நேரத்தை குறித்து அலர்ட்டாக இருந்தால் டன் கணக்கில் சாதிக்கலாமே! நம் மூளை, காலத்தை எப்படி புரிந்துகொள்கிறது,  நேரத்தை எப்படி உணர்ச்சிகள் உறிஞ்சுகின்றன, நேரத்தினை குறைத்து மகிழ்ச்சியான வாழ்வை அதிகப்படுத்துவது எப்படி என சொல்லித்தரும் ரைமிங் அண்ட் சூப்பர் டைமிங் விளையாட்டுத்தான் இந்த பயிற்சி விளையாட்டு.

நேரத்தை ரசித்து ருசித்து அனுபவிக்கும்போது அதன் அருமை புரியும்:-

பாடல் :- நிலாக் காய்கிறது, நிறம் தேய்கிறது, யாரும் ரசிக்கவில்லையே ....இந்தக் கண்கள் மட்டும் உன்னைக் காணும்....
  
பாடல் {....இன்னும் கொஞ்சநேரம் இருந்தாதான் என்ன? ஏன் அவசரம் என்ன அவசரம்.. நில்லு கண்ணே...}

பயிற்சி விளையாட்டு:- கேட்கப்படும் கேள்விக்கு ஒரு நிமிட நேரத்திற்குள் பதிலளிக்கவேண்டும். தவறான பதிலுக்கு உங்களுக்கு தரப்பட்ட நேரத்திலிருந்து இரண்டு (2) நிமிடம் கழிக்கப்படும். சரியான விடையையும் அதை ஒரு நிமிடத்திற்கு முன்னதாக கூறினால் மேலும் ஒரு நிமிடம் உங்களது கணக்கில் சேர்க்கப்படும். பதில் தெரியாவிட்டால் பாஸ் என்று கூறியோ அல்லது அமைதியாக இருந்து அந்த ஒரு நிமிடத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம்.  இப்போது பயிற்சி விளையாட்டை விளையாடலாம் வாங்க.

இந்த விளையாட்டில் நீங்கள் கவனமாக இருக்கவேண்டியது தவறான பதிலை கூறி அதிக நேரத்தை இழக்கக்கூடாது. விடை தெரியவில்லை என்றால் அமைதி காத்து ஒரு நிமிட நேரத்தை செலவு செய்து தப்பித்துக்கொள்ளலாம். விடை தெரிந்தால் உடனே ஒரு நிமிடத்திற்குள் கூறி மேலும் ஒரு நிமிட நேரத்தை சேமிக்கலாம். ஆகவே இந்த விவரங்களை நன்கு நினைவில் வைத்திருந்தாலே நேரத்தை சேமித்து வெற்றிபெறலாம். சரிதானே சுட்டீஸ் நீங்களும் இந்த விளையாட்டும் விளையாடிப்பாருங்கள். நீங்கள் எத்தனை மணித்துளிகளை சேமித்தீர்கள் என்று கணக்கிட்டு வெற்றிபெறுங்கள். 

உங்களின் வாழ்க்கையின் வெற்றி வாய்ப்பிற்கு கீழ்கண்டவைகளை உங்களின் கவனத்தில் வையுங்கள் எதிர்காலத்திற்கு உங்களுக்கு பயன்படும்.  ஒரு தொழிற்ச்சாலையின், ஒரு நாளின் 24மணி நேர உற்பத்தியை, அதே 24மணி நேரத்தில் (ஒருநாளின்) 30மணிநேர உற்பத்தியாக்கி(அதாவது ஒவொரு 8 மணி நேரத்தில், 10 மணி நேர உற்பத்தி = 2 மணி நேர கூடுதல் உற்பத்தி 3shift x 8+2 =30Hrs)-லாபத்தை செயலில் செய்து காட்டிவிட்டால் எப்படிப்பட்ட நிறுவனமாக இருந்தாலும் அசந்து போவார்கள்" அப்படி அந்த தொழிற்ச்சாலையில் பணிபுரியும் பலரது  ஒருநாளாய 6 மணி நேரத்திற்கான சம்பளத்தை ஒரு பெரிய தொழிற்சாலைக்கு மிச்சமாககுகிறீர்கள் என்றால் ஒரு மாதத்தில் அந்த தொகையானது ஒரு பெரிய தொகையாகவே இருக்கும்.  "நேரத்தை, ஆற்றலை, பணத்தை  மிச்சப்படுத்துவதுடன்,  இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தியுங்கள் பல உண்மைகள் உங்களுக்கும் புரியும்"

உதாரணமாக அறிவியல் முறை வேலை நேரம் என்பார்கள். ஒருவர் ஒரு நாளின் வேலை நேரமான 8 மணி நேரத்தில், 100 வாகன டயர்களை பொருந்துகிறார் என்றால், அவருக்கு அந்த வேலை பழக பழக அவர் மேலும் அதிவேகமாக அவரின் வேலையை செய்வார் ஆகவே அவர் 100 வாகன டயர்களை பொருத்தும் வேலையை 6மணி நேரத்திலேயே முடித்துவிடுவார் அல்லது அவரது 8 மணி நேர வேளையில் 125 வாகன டயர்களை பொருத்தியிருப்பார். அதாவது 25 டயர்கள் பொருத்தும் வேலையை அதிகமாக செய்திருப்பார். 

ஆகவே 8 மணி நேர வேலையை நேரத்தை சேமித்து 6 மணி நேரத்திலேயே முடித்துவிடுவார். அல்லது மேலும் 2 மணி நேர அதிக அளவிலான உற்பத்தியை செய்திருப்பார்.  

சுட்டீஸ் இது உங்கள் வீட்டில் வேலைக்கு போகும் உங்களது பெற்றோர்களான அப்பா அம்மா அவர்களுக்கு இந்த உதாரணத்தை எடுத்து சொல்லுங்கள் எப்போதும் அலுவலகம் வேலை என்று உங்களை கவனிக்காமல் உங்களோடு வீட்டில் சந்தோசமாக நேரத்தை செலவு செய்ய தெரியாத உங்களது பெற்றோர்களுக்கு நீங்கள்தான் விவரமாக எடுத்து கூறவேண்டும்... "என் பாசத்திற்குரிய அப்பா அல்லது அம்மா, முதலில் நீங்கள் உங்களது அலுவலகத்தில் உங்களது வேலை எது என்று நன்கு தெரிந்துகொண்டபின், அந்தப் பணியை சிறப்பாக செய்வதோடு நேரத்தை மிச்சம் பிடித்து அந்த நேரத்தில் உங்களது சுய முன்னேற்றத்திற்கான பணியையும் உங்களது குடும்பம், பிள்ளைகள்  சார்ந்த பணிகளை செய்தால் தான் எனது பெற்றோர்களான நீங்கள் சிறப்பான இடத்தை அடையமுடியும். அதற்க்கு உங்களது அலுவலகப்பணியை குறித்த நேரத்திற்கு  முன்பாகவே முடியுமாறு செய்து முடித்து, அதில் கிடைக்கும் உபரி நேரத்தில் எங்களுக்கும் உங்களோடு விளையாட நேரம் ஒதுக்கவேண்டும் என்று கூறுங்கள்.

உதாரணமாக ஒருவரின் அலுவலக வேலை 8-மணி நேரம் என்றால், நீங்கள் 8-மணி நேரத்தில் செய்யவேண்டிய வேலையை 6-மணி நேரத்திலேயே செய்து முடித்துவிட்டு 2-மணி நேரத்தை மிச்சப்படுத்தி உங்களின் சொந்த குடும்பத்திற்காகவும் அதோடு உங்களை நீங்கள் உயர்த்திக்கொள்ளும் செயல்களை செய்து சிறப்பான நிலையை அடைய பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.ஆகவே ஒரு நாளைக்கு 24மணி நேரம்  என்றால், ஒவோவ்று 8-மணி நேரத்தில் நீங்கள் சேமிக்கும் 2மணி நேரம் உங்களுடைய மகிழ்ச்சியான நேரமாக"அப்பாவின் நேரமாக", உங்களின் குடும்ப உயர்வுக்காக மட்டும் செலவு செய்யக்கூடியதாக, ஒருநாளைக்கு  6மணி நேரம் உங்களுக்கு கிடைக்கிறது. அதாவது ஒரு நாள் என்பது உங்களுக்கு (நாள் 24 மணி + உங்களுடைய சேமிப்பு  6 மணி  = 30மணி நேரம்). மற்றவர்களுக்கு வெறும் 24மணி நேரம். "அதாவது உங்களுக்கு பணம்பழம போன்ற நெல்லிக்கனி" புரிகிறதா? என்ன சுட்டீஸ், நீங்கள்தான் இந்த உதாரணங்களைக் கூறி உங்களின் பெற்றோர்களிடம் கேட்கவேண்டும். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-20*
*(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு-2* 

Monday, June 4, 2018

(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*

*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-21*
*(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-1.*

*ஹலோ சுட்டீஸ் இந்த வாரம் முழுவதும் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு (ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு.  ஆர்வத்தைத் தூண்டும் துப்பறிதல் துறை, துப்பு துலக்குதல் பற்றி தெரிந்துகொள்ளும் பயிற்சி விளையாட்டுக்கள். மறந்துவிடாதீர்கள் பயிற்சி விளையாட்டு பகுதி 21 முதல்....அனைத்தும் மிகச்சிறந்த வாழ்க்கையில் அவசியம் தெரிந்துவைத்திருக்கவேண்டிய முக்கியமான பயிற்சி விளையாட்டுக்கள்.*

சுட்டீஸ்களிடம், "நேற்று உன்னிடம் என்ன சொன்னேன்?" என்று அம்மாவோ அல்லது அப்பாவோ கேட்பது, சுட்டீஸ்களின் நினைவாற்றல் எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள, அது வெறும் மூளைக்கு தரும் பயிற்சிமட்டுமே. ஆனால் துப்பறியும் விளையாட்டு மூளையின் அறிவுத்திறனுக்கும், செயல்பாடுகளின் தன்மைக்கும் சவாலாக அமைந்த ஒரு விளையாட்டு. இந்த விளையாட்டில் உடலுழைப்பும்  அறிவுத்திறனையும் பயன்படுத்தி விளையாடும் ஒரு விளையாட்டு இது. 

வாங்க இன்றய விளையாட்டை விளையாடுவதற்கு முன்பாக துப்பறியும் துறைசார்ந்த சில விவரங்களை நாம் தெரிந்துகொள்வோம்.

துப்பறிவதைப்பற்றி சுட்டீஸ்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்போம். அதோடு நான் தொகுத்திருக்கும் சில சுவாரிசயமான துப்பறியும் தகவல்களையும் தருகிறேன்.

@ சுட்டீஸ்:- துப்பறியும் கதை என்று சொன்னாலே எனக்கு சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் செய்யக்கூடிய சாகசங்கள்தான் ஞாபகம் வரும்.    

@கோகி(நான்):-துப்பறியும் கதைகளின் ராணியாகத் திகழ்ந்தவர் அகதா கிறிஸ்டி. ஆங்கிலத்தில் அவர் எழுதிய நாவல்கள் உலகெங்கும் கோடிக்கணக்கில் விற்பனையாகி இருக்கின்றன. ஆங்கிலம் அறியாத ஆனால், துப்பறியும் கதைகள் படிக்கும் ஆர்வம் மிக்கத் தமிழ் ரசிகர்களுக்கு இந்த நூல்கள் மிகத் திருப்தியை அளிக்கும். தெளிவான மொழிபெயர்ப்பு நூல்களும் தற்போது கிடைக்கிறது.

@ கோகி(நான்):-துப்பறியும் சாம்பு கதைகள் என்றால் எனக்கு மிகவும் பிடித்த கதைகள். அதோடு நான் சிறுவனாக இருந்த எனது பால்ய காலத்து நினைவுகள் மிகவும் இனிமையான நினைவுகள். 

@ சுட்டீஸ் :- துப்பறியும் சாம்பு, ராஜேஷ்குமார், எழுத்தாளர் சுஜாதா போன்றவர்கள் எழுதிய துப்பறியும் கதைகள் படித்திருக்கிறேன்.

@ கோகி(நான்):-மிகவும் புகழ்பெற்ற எனக்கு பிடித்த பழைய காலத்து அப்புசாமியும் சீதாப்பாட்டியும் கதையிலும் துப்பறிய சென்று முடியாமல் சொதப்பி மாட்டிக்கொள்ளும் சுவாரிஷ்யம் ரசிக்கவேண்டிய கதைகள்.

@ சுட்டீஸ்:- "என்னாகுமோ ஏதாகுமோன்னுதான். கொலை கேசு துப்பறிதல்.. திகிலாக இருக்கும்." 

@ நான் ஒரு விவரம் சொல்கிறேன் கேளுங்கள்:-  1957-இல்  அப்போது “திருவாளர் தேவன்” அவர்கள் ஆனந்த  விகடனின் பொறுப்பாசிரியராய் இருந்தார். அவர் "முத்து” என்ற பெயரில் பல அருமையான சிறுவர் கதைகளை எழுதியவர். அப்போது விகடன் உதவி ஆசிரியர்களில் ஒருவரான, “கோபு” கோபாலகிருஷ்ணன்.“ அவர்தான் "தேவன்” அவர்களின் மறைவிற்குப்பிறகு “தேவனின் “துப்பறியும் சாம்பு” படக்கதை வடிவில் 1958 ஏப்ரல் முதல் ஆனந்த விகடனில் பவனி வந்தது.  கோபுலுவின் கைவண்ணத்தில் படக்கதை மின்னியது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. உண்மையைச் சொல்லப் போனால், இன்றைய தலைமுறையில் பலருக்கு “ராஜு” என்ற ஓவியர் தான் முதலில் “சாம்பு” வுக்கு உயிரூட்டியவர் என்றே தெரியாது! அதாவது, ”சாம்பு” அவர்களின்  பதிவுகளையும், ராஜுவின் படங்களையும் பார்க்காதவர்கள்!: “சாம்பு” கதைகள் என்றவுடனே அவர்களுக்குக் “கோபுலு”வின் படங்கள் தான் நினைவுக்கு வரும்!  “சாம்பு”அவர்களின் முதல் துப்பறியும் காமிஸ் கதைப்பாடத்தை பாருங்கள்....

@ கோகி(நான்):-துப்பறிதல்  பற்றி திருக்குறளில் நமது திருவள்ளுவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம். திருக்குறளில் ஒற்றாடல் என்கிற தனி அதிகாரத்தையே தந்திருக்கிறார். 

@ "வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு அனைவரையும் ஆராய்வது ஒற்று" (குறள்: 584) என்ற பாடலில் சொல்லப்பட்ட மூவகையினரும் ஒரு நாட்டின் அதிகார வட்டத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் ஆவர். அரசு செலுத்துவதில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் ஆதலால் இவர்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்து நாடாள்வோன் கண்காணித்து வரவேண்டும் என்கிறார் வள்ளுவர். தமது அரசியல் செல்வாக்கைத் தவறாகப் பயன்படுத்தி அரசுக்குத் தீங்கு இழைக்க வாய்ப்பு மிகையாக உள்ளவர்கள் இவர்கள். எனவே ஆட்சியாளர்க்கு மிக நெருக்கத்தில் இருந்தாலும் அவர்களையும் ஒற்று வளையத்தில் கொண்டுவர வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இன்றைய சூழ்நிலைகளுக்கும் இப்பாடல் எத்துணை பொருத்தமாகிறது என்பதைக் காணலாம்...

@கோகி(நான்):- ஆங்கில திரைப்பட உலகின் முக்கிய படமாக இன்று வரை கருதப்படும் ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் புகழ்பெற்றவை. உளவு, துப்பறிதல் ஆகிய காட்சியமைப்புகள் இப்படங்களில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், இத்திரைப்பட வரிசைகளில் 7 முறை கதாநாயகனாக நடித்த ரோஜர் மூர் (89) சென்ற வருடம் 2017 மே -மாதம் 23ம் தேதியன்று கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு ஸ்விச்சர்லாந்தில் காலமானார்.

@ நான் ஒரு தகவல் சொல்கிறேன் கேளுங்கள்:- சர்வதேச துப்பறிதல் நாவல்களில் மிகப்பிரபலமான "த-டா-வின்சி-கோட்" 2003ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் திரு டான் பிரவுனால் எழுதப்பட்ட மர்மத்-துப்பறிவுப் புனைவு நாவலாகும். இந்த புத்தகம் உலகமெங்கும் 80 மில்லியன் புத்தகங்கள் விற்பனையான சிறப்பு விற்பனைப்புத்தகமாகவும், 44 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதுவும் ஆகும். துப்பறிதல், திகில் மற்றும் முரண்பாட்டு புதின வகைகளை ஒன்றிணைத்து, ராபர்ட் லாங்டன் என்ற கதாப்பாத்திரத்துடன் வெளியிடப்பட்ட கதாசிரியர் பிரவுனின் இரண்டாவது நாவலாகும்.

என்ன சுட்டீஸ் இன்றய பயிற்சி விளையாட்டில் துப்பறிவதைப்பற்றிய சில தகவல்களை தெரிந்துகொண்டோம் அல்லவா? நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் துப்பறியும் விளையாட்டில், "அம்புக்குறி, சிகப்பு கைக்குட்டை" என்கிற ஒரு விளையாட்டை விளையாடப்போகிறோம். அடுத்த பயிற்சி விளையாட்டில் சந்திப்போமா?

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. 

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-22*
*(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு-2.*

மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-3

பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-3
மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-1

அப்போது நாங்கள் 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம் ”மாணவர்களே! நாளை வகுப்புக்கு வரும்போது சிலேட்டும், அதில் எழுத பல்ப குச்சிகளும் வாங்கி வரவேண்டும். வாங்கி வராதவர்கள் வகுப்புக்கு வரத்தேவையில்லை அதிரடி உத்தரவிட்டார் ஆசிரியர் .

”கொல்லென்று சிரிப்பு எழுந்த்து, ஒரு குறும்புக்கார பையன், ”ஸார், ஸ்கூலே முடிக்க போறோம், இப்ப போய் முதல் வகுப்பு பிள்ளை மாதிரி சிலேட்டும், பல்பமும் வாங்கி வரச்சொல்றீங்களே” என்றான்.

ஆங்கில ஆசிரியர் கோபப்படவில்லை. மாறாக, சிலேட் வாங்கி வரச்சொன்னதற்கான காரணம் நீங்களே போக போக புரிந்து கொள்வீர்கள்” என்று முடித்து கொண்டார்.

மறுநாள்… ஆங்கில வகுப்பு…அனைவர் கையிலும் சிலேட்டும். பல்ப குச்சிகளும்… மற்ற வகுப்பு பிள்ளைகள் ஒருமாதிரியாக பார்த்து  கேலியும் செய்தார்கள்.

ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்து…”ஆங்கில பாடல் பகுதியை ” கரும்பலகையில் எழுதினார். அதைப் பார்த்து எங்களை எழுத சொன்னார். எழுதிய பின்னர்… சிலேட்டில் உள்ளதை அழித்து விட சொன்னார். இப்படி நான்கு முறை முடித்து ஐந்தாவது முறையில்….கரும்பலகையில் உள்ளதை அழித்து விட்டார்.

இப்போது, எழுதுங்கள் என்றார். என்ன ஆச்சர்யம்…அனைவரும்… புத்தகத்தில் உள்ளதை அச்சு மாறாமல் சிலேட்டில் எழுதி முடித்தனர். ஒரிருவர் தவிர. அனைவருக்கும் மதிப்பெண்களும் சிலேட்டிலேயே வழங்கி ஆச்சர்யப்படுத்தினார்.

ஒருமுறை எழுதுவது பத்து முறை படிப்பதற்குச் சமம் என்று எங்கள் ஆசிரியர் சொல்வார்..புரியாத ஆங்கில பாடலையும் மனப்பாடம் செய்ய இதுவும் ஒரு வழி.

அடுத்தது மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-2ஐ விளையாடுவோமா? நாம் படிக்கும் பாடங்களில் உள்ள விஷயங்களுக்குத் தொடர்புடைய பொருளையோ அல்லது ஒரு ஓவியத்தையோ அல்லது ஏதாவது படலையோ அல்லது எண்களையோ நினைவில் வைத்துக்கொள்வது ஒரு நல்ல முறை. இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது என்று அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி திரு.அசோகன் குப்புசாமி  https://kavithaigal0510.blogspot.com/2018/04/blog-post22.html

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
*பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-4*
(ஆ)மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-2

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள-பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-2


பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-2
ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள:-பயிற்சி விளையாட்டு-01

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள என்னுடைய தந்தை சொல்லிக் கொடுத்த விளையாட்டுக்களில் வீட்டின் ஒரு அறையில் சில பொருட்களை வைத்துவிட்டு எங்களை அந்த அறையை சுற்றிப்பார்த்துவிட்டு வந்ததும், அந்த அறையினுள்ளே என்ன என்ன பார்த்தீர்கள்? என்று பட்டியலிடச்சொல்லுவார். 

அதேபோல   திரைப்படம் பார்க்க அழைத்துச்செல்லும்போதும் அந்த திரையரங்கில்  எத்தனை மின்விசிறிகள் இருந்தது? அவற்றில் எத்தனை சரியாக இயங்காமல் நின்றுபோயிருந்தது? போன்ற பல கேள்விகளை கேட்ப்பார் அதற்காகவே நாங்கள் போட்டிபோட்டுக்கொண்டு எங்கும், எதைப்பார்த்தாலும்   குறிப்பெடுத்துக்கொள்வோம். 

அவ்வளவு ஏன்.... இன்றைக்கும் நாங்கள் படித்த பள்ளியின் கரும்பலகையில் இருக்கும் ஓட்டை, உடைசல், குழிகளில் ஆசிரியர் வரைந்த படமும், எழுதிய பாடமும் எங்கள் மனதில் நன்றாக பசுமரத்தாணிபோல இன்றளவும் நினைவில் இருக்கிறது என்றால் அன்று எங்களின் தந்தையார் சொல்லித்தந்த பயிற்சி விளையாட்டுக்களே காரணம்.

வாருங்கள் அடுத்த பகுதியில் நாம் பார்க்கவிருப்பது *பாடங்களை மனப்பாடம் செய்வது எப்படி? என்று ஒரு விளையாட்டு சொல்லிக்கொடுத்தார் பிறகு ஒரு பதிவில், சுட்டீஸ் உங்களுக்கு அந்த விளையாட்டையும் விளையாட சொல்லித்தருகிறேன்.*

நாம் ஒரு திரைப்படத்திற்கு செல்கிறோம். அந்த படத்தை ஒரே ஒரு முறைதான் பார்க்கிறோம். அப்படியிருந்தும் அந்த படத்தில் இடம்பெற்ற பாடலை மனப்பாடம் செய்யாமலே நாம்மால் எப்படி பாடமுடிகிறது?வாருங்கள் எனது அடுத்த பகுதியில் நாம் பார்க்கவிருப்பது மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-1 *பாடங்களை மனப்பாடம் செய்வது எப்படி? என்று விளையாடிப் பார்க்கலாம் வாருங்கள். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. புது தில்லியிலிருந்து.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-
பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-3
மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு-1

ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-1

பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-1

உண்மைதான் பலவிவரங்கள் பள்ளியில் சொல்லித்தருவதில்லை அந்த விஷயத்தில் (நாங்கள் 6 குழந்தைகள் உடன்பிறந்தவர்கள்) எங்களுடைய தந்தை எங்களுக்கு சொல்லித்தந்த சிறு சிறு பயிற்சி விளையாட்டு இன்றும் எங்களுக்கு மிகவும் பக்கபலமாக திகழ்கிறது. 

பயப்படாமல் இருக்க சிறு பயிற்சி விளையாட்டு.. இரவு காற்றில் வீட்டு சன்னல் கதவு ஆடுவதைக்காட்டி பூதம் வருகிறது என்று சொல்லி அதை எப்படி எதிர்கொள்வது என்பதை எடுத்துக்கூறுவார், ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ளும் சிறு பயிற்சி விளையாட்டை சொல்லித்தந்திருக்கிறார், எளிய வழியில் மனப்பாடம் செய்வது எப்படி என்று சிறு பயிற்சி விளையாட்டில் சொல்லித்தந்திருக்கிறார், கணித பாடங்களுக்கும் முறுக்கு, சீடை, மிட்டாய்களை பயன்படுத்தி கணக்கு பயிற்சி விளையாட்டை சொல்லித்தந்திருக்கிறார், ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளும் பல பயிற்சி விளையாட்டையும் சொல்லிக்கொடுத்தார், தேர்வு எழுதும் பயிச்சி விளையாட்டை விளையாட சொல்லித்தந்திருக்கிறார், அறிவியல், சரித்திரம், பூகோளம் என ஒவ்வொரு பாடத்திற்கும் ஒரு பயிற்சி விளையாட்டை சொல்லித்தந்திருக்கிறார். 

இப்படி பல கசப்பான பாடங்களையும் விரும்பி படிப்பது எப்படி என்று அதை ஒரு விளையாட்டாக மாற்றி அந்த விளையாட்டை எப்படி விளையாடவேண்டும் என்று சொல்லித்தந்திருக்கிறார். இவை மட்டுமில்லாமல் இசையில் அப்பாவுக்கு அதிக ஆர்வம் புல்புல்தரங்கா என்கிற இசைக்கருவியை வாசித்து பாம்பு மகுடி இசையை அதில் வாசித்துக்காட்டுவார். "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுதே மற்றும் உன்னை கண்தேடுதே" போன்ற பாடல்களை வாசித்து காட்டுவார். அதோடு அவர் தமது வாயில் விசில் ஊதுவதை போல வாயால் நாதஸ்வரம் வாசித்து காட்டுவார். அவரது நாதஸ்வர கச்சேரியை கேட்பதற்காகவே ஒவ்வொரு கல்யாணம் போன்ற விஷேஷ வைபவங்களில் அவர் கலந்துகொள்ளும்போதெல்லாம் குட்டி கச்சேரி நடத்திவிடுவார்கள்.    

எங்கள் அப்பா "மணி" என்ற ஒரு கற்பனை பாத்திரத்தை உருவாக்கி வைத்திருந்தார். எதற்க்கெடுத்தாலும் மணி என்று பெயர் கூறி ஆரம்பிப்பார்... அந்த அளவில் மணி என்பவன் மிக புத்திசாலியான பையனாக வலம்வந்தான். எங்கள் அப்பாவுக்கு பிடித்த அந்த "மணி" என்பவன்மீது எங்களுக்கு கோபம் கோபமாக வரும் மணி மட்டும் கையில் கிடைத்தால் அடித்து நொறுக்கிவிடுவோம் என்று எங்கள் அப்பா அவரின் கற்பனை பாத்திரமான மணி மீது வைத்திருந்த பாசத்தினால் பொறாமை கொண்டோம். ஆனால் எப்போதும் என் அப்பா மணியைப்பார் ரொம்ப நல்லப்பையன் நீயும் இருக்கிறாயே என மணியை உயர்த்தி எங்களை தாழ்த்தி என்றும் மணியோடு எங்களை ஒப்பிட்டு பேசியதில்லை.  

பல படிப்பினைகளைத்தரும் சிறு சிறு பயிற்சிகளை பல விளையாட்டுக்களாக மாற்றி அந்த விளையாட்டின் வழியே சொல்லித் தந்ததை  இன்றளவும் நானும் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அந்த விளையாட்டுக்கள்தான் பலரும் என்னை விரும்பும் ஒரு உன்னத நிலையை எனக்கு பெற்றுத் தந்தது.  வானொலியில் நான் வழங்கிய நிகழ்ச்சிகளின் வெற்றிக்கும் அவர் காட்டிய வழியே எனக்கும் வழிகாட்டியாக அமைந்த அருமையான விளையாட்டுக்கள் அவை. 

அருமை சுட்டீஸ்கள் அனைவருக்கும்,  எனது தந்தையும் மற்றும் எனது வகுப்பாசிரியரும் எனக்கு சொல்லித்தந்த வாழ்க்கை கல்விக்கு அவசியமான சிறு சிறு பயிற்சி விளையாட்டுக்களைத்தான் நான் இப்போது ஒன்றன் பின் ஒன்றாக உங்களுக்கும் பயிற்சி விளையாட்டாக சொல்லித்தருகிறேன். வாருங்கள் பல்வேறு பயிற்சி விளையாட்டுக்களை விளையாடப்போகலாம். 

(அ)ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள (மறதியை போக்க) பயிற்சி விளையாட்டு.
(ஆ) மனப்பாடம் செய்ய பயிற்சி விளையாட்டு.
(இ) பயத்தை போக்க பயிற்சி விளையாட்டு. 
(ஈ)கணக்குப் பாடங்களுக்கான (முறுக்கு, சீடை, மிட்டாய்களைக்கொண்டு) பயிற்சி விளையாட்டு.  
(உ) ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ளும் பயிற்சி விளையாட்டு. 
(ஊ) தேர்வு எழுதும் பயிச்சி விளையாட்டு. 
(எ) அறிவியல் பயிற்சி விளையாட்டு. 
(ஏ) கசப்பான பாடங்களையும் விரும்பி படிப்பது எப்படி என்ற பயிற்சி விளையாட்டு. 
(ஐ) துப்பறியும் பயிற்சி விளையாட்டு. 
(ஒ) சோம்பல் தவிர்த்து புத்துணர்ச்சி பெரும் பயிற்சி விளையாட்டு.
(ஓ)தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் (ஒரேநேரத்தில் 9வேலைகளை செய்யும்) பயிற்சி விளையாட்டு.
(ஒள) பணத்தின் மதிப்பை தெரிந்துகொள்ளும், விற்று வாங்கும் பயிற்சி விளையாட்டு.
(ஃ)பொது சேவை செய்யும் பயிற்சி விளையாட்டு. 
(அஅ)தியானம் மற்றும் பக்திக்கான பயிற்சி விளையாட்டு.
(அஆ)தோட்டம் அமைக்கும் பயிற்சி விளையாட்டு.
(அஇ)வீட்டு வளர்ப்பு பிராணிகள் பராமரிப்பு பயிற்சி விளையாட்டு.
(அஈ)உடற்பயிற்சி விளையாட்டு. (நீச்சல், மிதிவண்டி, காத்தாடி செய்து பறக்கவிட அப்பா சொல்லித்தந்து)
(அஉ)சமையல் பழகும் ஆராய்ச்சி பயிற்சி விளையாட்டுக்கள். (அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஒவ்வொரு ஞாயிறு விடுமுறையிலும் சமையல் ஆராய்ச்சி??? தக்காளிக்கு பதில் ஆப்பிள் போட்டு ரசம் வைப்பது ஆராய்ச்சி சமையல்).       
(அஊ) வெவ்வேறு மொழிகளை கற்றுக்கொள்ளும் பயிற்சி விளையாட்டு. 

இப்படி இன்னும் பல விளையாட்டுக்கள் மேற்கண்ட தலைப்புகளில் விளையாடியிருக்கிறோம்.. இவ்வளவுதானா? இன்னும் இருக்கிறதா? என்றால்...ஞாபகம் வரும்போதெல்லாம்... மேலும் பல தலைப்புகளில் தொடரும்.

எனது அடுத்த பதிவில், பயிற்சி விளையாட்டில் (அ)ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள:-பயிற்சி விளையாட்டு-01 எப்படி விளையாடுவது என்று விளையாடிப் பார்க்கலாம் வாருங்கள். 

நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.

*முன்னோட்டம்:-*
நாளை மறுநாள் நாம் விளையாடவிருக்கும் பயிற்சி விளையாட்டு:-

பயிற்சி விளையாட்டு தொடரின் பகுதி-2
ஞாபக சக்தியை பெருக்கிக்கொள்ள:-பயிற்சி விளையாட்டு-01

Create your own Online Supplement Store with eStoreBuilder at www.estorebuilder.com.