அப்போது நான் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் நேரம்... எனது இஸ்லாமிய (முஸ்லிம்) நண்பர்களான "ஜமீர் மற்றும் சலாவுதீன்" இன்று மாலை நாம் தர்காவிற்க்கு (மசூதி) செல்லவேண்டும் அருகே உறவினர் ஒருவரின் திருமண விழாவில் சங்கீத கச்சேரி உள்ளது.... உனக்கு சங்கீதம் பிடிக்கும் என்பதால் என்னுடன் வருகிறாய் என்றான்.....
பள்ளிக்கூட நாட்களில் எனது நட்பு வட்டம் பெரியது, பல இனத்தவர்களில் நண்பர்கள் இருந்தார்கள். ஐயர் ஆத்து பையனான நான் எனது நண்பர்களுடன் தேவாலயமும் [எனது நண்பர்களில் ஒருவன் "பால் சாமுவேல் மனோகர்" தற்போது திருச்சிக்கருகே ஒரு கிருஸ்துவ தேவாலயத்தில் பாதிரியராக இருக்கிறார்.. மாணவப்பருவத்தில் நாங்கள் அவனை 'பாச மனோ' என்றுதான் அழைப்போம் அவனோடு ஞாயிற்றுக்கிழமைகளில் கிருஸ்துவ தேவாலயம் சென்றுவருவதும் ஒரு விளையாட்டான பிடித்த பொழுதுபோக்குகள்] அதேப்போல எனது இஸ்லாமிய நண்பர்களுடன் தலையில் கைக்குட்டை அணிந்து அவர்களின் தர்க்காவுக்கும் (மசூதிக்கு) சென்றிருக்கிறேன். எனது இஸ்லாமிய நண்பனின் வீட்டினர், ஐயர் பையன் என்பதால் அவர்களது வீட்டில் குடிக்கத்தரும் தண்ணீர் டம்ளரையும் இரண்டுமுறை நன்கு கழுவிவிட்டு எனக்கு தண்ணீர் பருகத்தருவார்கள். அத்தனை அன்பை என்னிடம் காட்டியதை என்றும் என்னால் மறக்கமுடியாத நினைவுகள். எனது மற்றொரு நண்பன் பெயர் "மஹாவீர்" ஜெயினமதத்தையும், பஞ்சாட்சரம் என்ற பெயருடைய நண்பன் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் மலைவாழ் இனத்தைச்சார்ந்தவன் மிக நன்றாக படிப்பவன் முதல் மதிப்பெண் எடுப்பவன் எனக்கு புரியாத கணக்குப் பாடங்களை அவன்தான் சொல்லித்தருவான் ஆறாம் வகுப்பிலிருந்து எனது நண்பன்..... ஊரின் செல்வந்தரான வஜ்ரவேல் செட்டியார் மகனான சுந்தரவேலும் எனது பிரியமான நண்பன் நாங்கள் ஒவ்வொரு வருடமும் பள்ளி நாடகத்தில் கட்டாயம் சேர்ந்து நடிப்போம்.
எனது இஸ்லாமிய (முஸ்லிம்) நண்பர்களான "ஜமீர் மற்றும் சலாவுதீன்" அன்றய கச்சேரி நிகழ்ச்சி பற்றி வேறு விவரம் ஏதும் சொல்லவில்லை, நண்பன் சொல்லிவிட்டான் என்பதால் என்னுடன் பள்ளியில் படித்த எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் "ஜெயந்தியிடம்" எனது வீட்டில் சொல்லிவிடும்படி கூறி, நண்பனுடன் அந்த சங்கீத கச்சேரிக்கு சென்றோம். கையில் புத்தகப்பைவேறு கனமாக இருந்தது, நிகழ்ச்சி மாலை நான்கு மணியிலிருந்தே தொடங்கிவிட்டது நாங்கள் உள்ளே நுழையும் பொது அந்த பாடல் ஒலித்தத்துக்கொண்டிருந்தது... . "இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லையென்று சொல்லுவதில்லை பொறுமையுடன் கேட்டுபாருங்கள் அவன் பொக்கிஷத்தை மூடியதில்ல" நாகூர் E.M.அனிபா அவர்கள் பாடிக்கொண்டிருந்தார்.... இசைக்கருவிகளான புல்புல் தாரங் மற்றும் ஹர்மொனிய இசையும், ஷனாய் ஓசையும் அவரின் குரலோடு சேர்ந்து மனதைக்கவர்ந்தது ....(எல்லோரும் கொண்டாடுவோம், அருள் மேவும் ஆண்டவனே..,தலைவாரிப் பூச்சூடி உன்னை, எத்தனை தொல்லைகள், அதிகாலை நேரம்,காண கண் கோடி வேண்டும் ,தமிழுக்கு அமுதென்று பேர்) என அடுத்த மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. வீட்டிற்கு திரும்பும் பொது எதோ இனம் புரியாத ஒன்று மனதை அழுத்திக்கொண்டிருந்ததைப்போல் உணர்ந்தேன்.
வீட்டில் பெரிய கலாட்டா எனக்காக காத்திருந்தது... என் பள்ளி மாணவியான பக்கத்து வீட்டு ஜெயத்தியின் அம்மா, என் வீட்டாரோடு சண்டை, .... "என் மகள் என்ன உங்கள் வீட்டு வேலைக்காரியா என"???
... இதெல்லாம் உனக்கு தேவைதானா என என் அக்காவும் அம்மாவும் கோபித்துக்கொள்ள, அன்று இரவு அப்பா வீட்டிற்கு வந்ததும் அவரின் பங்கிற்கு அவர் அணிந்திருந்த பேண்ட் பெல்ட்டால் சாட்டையடி வாங்கியதும்...அன்றய அந்த நிகழ்ச்சி மறக்கமுடியாமல் மனதில் நிலைத்து நின்றது......
சிறுவயதுமுதலே சங்கீத கச்சேரி, பள்ளிக்கூட நாடகம், இனம் மொழி என்று எந்த பிரிவினையும் மனதில் தோன்றாமல் அனைத்துமாதத்தினர்களின் கொண்டாட்டங்களில் நிகழ்ச்சியிலும் பங்குகொண்டது பின்னாளில் எந்த நிகழ்ச்சியையும் ஏற்று நடத்திட திடமான மனநிலையைத் தந்தது என்றால் அது சிறு வயதிலிருந்தே மனதில் ஊறிப்போன செயலே.
வாடாமலர் நினைவுகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி. https://youtu.be/gzMOsaT3Xkw ...